![]()
தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில்
இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது
1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது.
கோயில் அமைப்பு :
சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.
தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்
இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த(Axial)மண்டபங்களும் விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.
முக்கிய விமானம் உத்தம வகையச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தர மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்ற்ன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.
மேலேயும் கீழேயும் பத்மதளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது.
கல்வெட்டுக்கள் :
இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
தஞ்சை பெரிய கோயில், இன்னொரு தோற்றம்
கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.
சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.
ஆலயத்தினைப் பற்றி அதன் வாயிலில் உள்ள செய்திப்பலகை
இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
இந்த ஆலயத்தில் குறிப்பிடும் படியான தகவல்கள்.
- இந்த ஆலய கட்டிட வேலைகள் 1003 ம் ஆண்டு தொடங்கி 7 வருடங்களில் முடிவுற்றதாக குறிபிடப்படுகின்றது.
- முதன்மையான கோபுரத்தின் உயரம் 215 அடி (65 மீற்றர்) என கணக்கிடப் பட்டுள்ளது. இது கருவரையின் மேலே 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. கருவறையினமீதகட்டிய இந்த மிகப்பெரிய விமானமே இக்கோயிலின பெரும சிறப்பாகபோற்றப்படுகிறது.
- கோபுரத்தின் நிழல் எக்காலத்திலும் நிலத்தில் படாத வண்ணம் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் படும் அற்புதமான கட்டிட கலையால் உருவாக்கப்பட்டது.
- இந்த ஆலயத்தின் கருவறையில் அமைந்துள்ள ஆவுடையார் எனும் மூல லிங்கம் விசேட ரகத்தில் அமைந்த தனியான கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 23 அடி , சுற்றளவு 54 அடி உடையதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கோவிலின் முன் அமர்ந்த கோலத்தில் உள்ள தனி கல்லில் செதுக்கிய நந்தி 25 தொன் எடை , 12 அடி உயரம் , 8 அடி அகலம், 20 அடி நீளமும் உடையது.
- கோபுரத்தின் உச்சியில் (விமானத்தில்) உள்ள எண்கோண கலசம் 3.8 மீற்றர் உயரமும் 81 தொன் எடை ( அண்ணளவாக 15 யானைகள் எடை) உடைய தனியான 25 அடி சதுர கல்லில் செதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு மூலைக்கு இரண்டு நந்திகளாக எட்டு நந்திகள் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
- மேல் சொல்லப்பட்ட கலசத்தினை செய்வதற்கு வேண்டிய அந்த கல்லை அக்காலத்தில் 6 கிலோமீற்றர் தூரத்தில் இருந்து கொண்டு வந்த மகா திறமை இன்றும் புரியாத புதிராக உலகில் பலராலும் பேசப்படுகின்றது.
- தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு இந்தியாவின் பல பகுதியிலும் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களின் மொத்த அளவானது ஜீசா பிரமிட்டு கட்டுவதற்கு பயன் படுத்தியதை விடவும் அதிகம் என ஆராச்சி செய்வோர் கணக்கிட்டுள்ளனர்.
- இந்த ஆலயத்தின் சுற்று சுவர்கள் அடங்கலான பகுதிக்குள் 200 தாஜ் மஹால்களை அடைக்கும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக விரிந்து பரந்துள்ளதாக வியந்த பேசப்படுகின்றது.
- தமிழர்களின் கலை, கலாச்சாரம், கற்பனைத் திறன், சிற்பத் திறன் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயிலானது தமிழர்களின் ஆட்சி , அறம் இவற்றுடன் ஆன்மீகப் பணிக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.
- இராஜ ராஜ பேரரசர் கோவில் திருப்பணியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாகவும் சுபீட்சமாகவும் வாழ்ந்தனர் எனவும் சொல்லப்படுகின்றது. மக்களுக்காக உயர் கல்விக்கூடங்கள், அருட்சாலைகள், அறச்சாலைகள் போன்ற பொது நற்பணி மன்றங்களையும் மன்னர் நிறுவியிருந்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது.
- இந்த ஆலயத்தின்வெளியே சோள பேரரசன் இராஜராஜனின சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கோவில் தற்போது மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இருந்துவருகின்றது.
- இந்த ஆலயம் (பிரகதீஸ்வரர்) UNESCO இனால் உலக கலாச்சார சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிய படங்கள் :

